நடராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 நவம்பர், 2016

கோளறுபதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

மூங்கில்போன்ற தோளினை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு , திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம் . அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும் .

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

என்பு , பன்றிக்கொம்பு , ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை , கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால் , அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது , பத்து , பதினாறு , பதினெட்டு , ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் .

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் .

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .

வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள் , வன்னி , கொன்றை , கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலிய குரங்கு , புலி , கொலையானை , பன்றி , கொடிய பாம்பு , கரடி , சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும் ! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும் .

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும் , கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய் , என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால் , வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா . அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும் .

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து , முடிமிசை ஒளிபொருந்திய பிறை , வன்னி , கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிற ராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா ; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும் . அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும் .

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும் , உமைபாகனும் , எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான் , முடிமீது கங்கை , எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன் , திரு மால் , வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும் , கெட்ட காலங்கள் , அலைகடல் , மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும் . அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும் .

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர் , பிறை , பாம்பு ஆகியவற்றை அணிந்து , என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும் . நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும் . அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும் .

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும் , கரும்பு , விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும் , வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும் , நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர் . இது நமது ஆணை .

-- திருஞானசம்பந்தர்



புதன், 25 பிப்ரவரி, 2015

நடராஜப் பத்து

மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமு‎ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக‎ன் அறு முகன் இருபிள்ளை ‏ இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னி‏டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை ‏ இதுவல்லவோ ‏
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ‏
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் ‏ இல்லாமல் பாடினும் மூர்க்கனேன் முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும்
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ
எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வி‎னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழு‎வனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ‎ன்று உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உ‎ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ ‏
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் ‏ இல்லை யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

தாயார் ‏ இருந்தென்ன தந்தையும் ‏ இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் ‏ இருந்தென்ன குருவாய் ‏ இருந்தென்ன சீடர்கள் ‏ இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க
உதவுமோ ‏ இதுவெல்லாம் தந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

‏இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ ‏
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ ‏ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ ‏ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ
‏இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ ‏ இது உன்குற்றம் என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ‏ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் ‏ இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் ‏ இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி என்முன்
கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற சேடர்களையுங் கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

- சிறுமணவூர் முனுசாமி

குறிப்பு :
இறுதிப்பாடலின் இறுதி அடிக்கு முந்தைய அடி, இசையில் வேறு மாதிரி பாடப்பட்டிருக்கும். எது சரியானது என்பது உறுதிபட தெரியவில்லை...

இறுதிப் பாடல் பின்நாட்களில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தின் காரணமாக இரண்டையும் அப்படியே பதிவிட்டுள்ளேன்...

தரவிறக்க: நடராஜப் பத்து