செவ்வாய், 24 நவம்பர், 2015

கந்தர் கலிவெண்பா

பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய் - ஆதிநடு

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும்
செறியம் பரம சிவமாய் - அறிவுக்

கனாதியா யைந்தொழிற்கு மப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத

பூரணமாய் நிந்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தி அளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி எண்பான்
ஆரவந்த நான்குநூறாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுமே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்
சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம்

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்.

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்து உலவா இன்பம் - மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்

பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளி வெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு

மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம்

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம்

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்று நிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்துநுதல் பொட்டழகும் - விண்ட

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும.

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்

பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங்கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்

புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி

இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா-வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி.

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும்

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்.

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதக் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் -சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீரவாகு - நெருப்பிலுதித்து

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று  (எழுத்தொன்று)
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம்

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம்

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும்

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல்
பூதமுந்தீ நீரும் பொருபடையும் - தீது அகலா

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்த்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியம் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை

எழுத்துமுத லாம் ஐந்த இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.

-- குமரகுருபரர்

தரவிறக்க : கந்தர் கலி வெண்பா

செவ்வாய், 17 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - பழமுதிர்ச்சோலை

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
அரனருள்சு தனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்

திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்
திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே
சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவண பவனே

குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
தம்பி மா ராகக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா

நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து

அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித்தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை

வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)

இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழநித் தேவ குமாரா
காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்

தேவராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

திங்கள், 16 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - திருத்தணி


காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமரா குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியநு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா
சண்முக நதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா

ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா
ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறுமுகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்
வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணீறணி திருநுதல் அழகும்
கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்
காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்
முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட

ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி
ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்
கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே
ஐயா! குமரா! அப்பனே! என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி
முன்னே கொட்டி முருகா! வருகவென்(று)
அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவற் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணப் புண்ணியா வருக
அழகிற் சிவனொளி அய்யனே வருக
களபம் அணியுமென் கந்தனே வருக
மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக

திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக
சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலிற் சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்
அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி

பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திர வாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்
ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமணி அணியுமா பரணமும்
வாயிலநன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோக பந்தியும்

மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்
ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்
அணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்

கருணை பொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்
ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம்
ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்

பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை
இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்
தானவர் அடியவர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்யச்
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பயிரவர் ஆனந்த மாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சப்த ரிஷிகள் சாந்தக மென்னச்

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்
நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லக்ஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய
ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன

ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்
சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க
குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல்உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேத்த

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க
மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்
வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர

ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்
சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலற்ற சூலத்தை அறுத்துச் சயித்து
விடவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர்

திருவாவி னன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை
கண்ணிய மாவூற்று கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்
பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம்

பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க
கேட்ட வரமும் கிருபைப் படியே
தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - திருப்பரங்குன்றம்

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

திருப்பரங் குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே
ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
முழுவுடை முதல்வன் முதலாய் நமோ நமோ


விராலி மலையுறை விமலா நமோ நமோ
நாமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ
சூரசம் கார துரையே நமோ நமோ
வீரவே லேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடை பரமா நமோ நமோ
கண்களீ ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடை கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்


பபப பபப சாம் சூம்
வவவ வவவ களம் ஓம்
லலி லிலி லுலு நாட்டிய அட்சம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருகநிஷ் களங்கனே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்


சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனத்துடன் ஞான குருஉனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தவனை


தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு
சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழை
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்


நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி
வாணியுடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முக மாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்


பூரணகிருபை புரிபவா போற்றி
பூதலத் துள்ள புண்ணியதீர்த் தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடைஉன்னை
அல்லும் பகலும் ஆசா ரத்துடன்
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி


பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
அரண்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

தேவராய சுவாமிகள்

சனி, 14 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - திருச்செந்தூர்

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம்பாடக் கிண்கிணியாட
மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருக வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் 

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செகண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்
றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
என்றனை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை யிரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோரும்
ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கைகால் முறியக்
கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரஹண பவனே சையொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருக அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னாவிருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்

மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துட னாளும்
ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்   (செயலது அருளுவர்.)
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் 

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

- தேவராய சுவாமிகள்

தரவிறக்க : திருச்செந்தூர் கந்தர் சஸ்டி கவசம்

வெள்ளி, 13 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - சுவாமிமலை

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே

நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி

திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்

ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா

துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை

செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

வியாழன், 12 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - பழநி

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல் 

திருவா வினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்

வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
கயிலாய மேவும் கனகசிம் மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
திருவரு ணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா

ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்

சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம

எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாகச் சண்முகத் துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
கைலாச மேருவா காசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி

மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
கங்கை யீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை

தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
சாகா வகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்

சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறு முகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி

மனத்தில் பிரியா வங்கண மாக
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்(து) ஆறு முகமும்
மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
தனதென வந்து தயவுடன் இரங்கிச்

சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
தட்டாத வாக்கு சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
சமுசார சாரமும் தானேநிசமென

வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
சகலகலை ஞானமும் தானெனக் கருளி
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்

துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப் பருகி
மழுவிட் டேவி வடவாக் கினிபோல்

தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
திருவை குண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்

ஏக ரூபமாய் என்முனே நின்று
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே சபித்து
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் எதுவேண் டினும்

தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சம்காரா!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

புதன், 11 நவம்பர், 2015

அறுபடைவீடுகளும் கவசங்களும்

முருகனின் புகழ் பாட எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் கந்தர் சஷ்டி கவசங்களுக்கு தனி இடம் உண்டு. இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் எப்பொழுது பிறந்தார்,  பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர் என்ற எந்த விவரமும் எனக்கு தெரியவில்லை, இணையத்திலும் தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. கவசங்களில் வரும் மந்திரங்களை வைத்து பார்க்கும்போது இவர் மந்திரங்கள் கற்றவர் என்பது தெளிவாகிறது. எதாவது ஒரு சித்தரின் வழிகாட்டுதலின் பெயரில் இவர் இப்பாடல்களை இயற்றியிருக்கலாம் என்பது என் கருத்து. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றியிருக்கிறார், எனினும்  திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று தொடங்கும் பாடல்தான் பெரும்பாலும் பாடப்படுகிறது.

இவர் தீராத வயறு வலியால் அவதிபட்டதால், பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகாததால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் திருச்செந்தூர் சென்றார். அந்தநேரம் கந்தர் சஷ்டி திருவிழா நடந்துகொண்டிருக்க, விழாமுடியும் வரை முருகனை தரிசித்துவிட்டு பின் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தார். தமிழிலும் மந்திரத்திலும் புலமை பெற்ற அவர் முருகன் மேல் ஆறு பாடல்களை, ஆறு படைவீடுகளின் மேல் பாடினார். இவர் பாடி முடிக்கவும், விழா முடியவும், இவரது வயிறு வலி பூரணமாக குணமடையவும் சரியாக இருந்தது.

இந்த ஆறு பாடல்களையே நாம் கந்தர் சஷ்டி கவசமாக போற்றுகின்றோம். இனிவரும் நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலாக பார்ப்போம்.

அறுபடைவீடுகள்
1. திருவாவினன்குடி (பழனி)
2. திருவேரகம் (சுவாமிமலை)
3. திருச்செந்தூர்
4. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)
5. திருப்பரங்குன்றம்
6. பழமுதிர்சோலை