ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சண்முக கவசம்



(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள(து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க

ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆகஇலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏக இலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க

உ றுதியாய் முன்கை தன்னை உ மையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க

ஊண்நிறை வயிற்றை மஞ்சை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உ ந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரிநந்தனன் காக்க, பீஜ
ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க

ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க

ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க

ஒலியெழ உ ரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க

ஓங்கிய சீற்றமே கொண்டு உ வணிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

ஒளவியமுளர் ஊன் உ ண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க

கடுவிடப் பாந்தன் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க

ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உ கமிசை இவையால், எற்குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க

சலத்தில் உ ய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உ ள்ள
குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க

ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உ டற்று விக்கல்,
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உ று வலிப்போடு எழுபுடைப்பகந்த (ரா)ஆதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உ ருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க

மண்ணிலும் மரத்தின்மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உ ள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க

வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க

இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
வழங்கும் நல் ஊண் உ ண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க

இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்கைத்தே, திகழ்பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க

இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே

-- பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

தரவிறக்க : சண்முக கவசம்

திங்கள், 23 பிப்ரவரி, 2015

குமரஸ்தவம்

ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம:
ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஓம் சுபநிதி பதயே நமோ நம:
ஓம் நரபதி பதயே நமோ நம:
ஓம் சுரபதி பதயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:

ஓம் கவிராஜ பதயே நமோ நம:
ஓம் தவராஜ பதயே நமோ நம:
ஓம் இகபர பதயே நமோ நம:
ஓம் புகழ்முனி பதயே நமோ நம:
ஓம் ஜயஜய பதயே நமோ நம:
ஓம் நயநய பதயே நமோ நம:
ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
ஓம் குஞ்சரி பதயே நமோ நம:
ஓம் வல்லீ பதயே நமோ நம:
ஓம் மல்ல பதயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:

ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
ஓம் இஷ்டி பதயே நமோ நம:
ஓம் அபேத பதயே நமோ நம:
ஓம் ஸுபோத பதயே நமோ நம:
ஓம் வியூஹ பதயே நமோ நம:
ஓம் மயூர பதயே நமோ நம:
ஓம் பூத பதயே நமோ நம:
ஓம் வேத பதயே நமோ நம:
ஓம் புராண பதயே நமோ நம:
ஓம் பிராண பதயே நமோ நம:
ஓம் பக்த பதயே நமோ நம:
ஓம் முக்த பதயே நமோ நம:

ஓம் அகார பதயே நமோ நம:
ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம:
ஓம் விகாச பதயே நமோ நம:
ஓம் ஆதி பதயே நமோ நம:
ஓம் பூதி பதயே நமோ நம:
ஓம் அமரா பதயே நமோ நம:
ஓம் குமரா பதயே நமோ நம:

-- ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்

தரவிறக்க குமாரஸ்தவம்

புதன், 11 பிப்ரவரி, 2015

பகை கடிதல்

திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே
இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே.

மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே.

இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே.

பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.

அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே.

எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே.

இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே.

இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே
குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

- ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்


--- விளக்கம் ---

நன்றி : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!!

விசேடம்:
 திரு - தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் - முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு - புற இருள் நீக்கும் சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. "ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி" என்பர் நக்கீரர். குருகுகள் - பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச்சிறப்பால் "குருகுகள் முதல்" எனப்பட்டது. இறைவன் - எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!!!!!

இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!!!!

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!!!!

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

விளக்கம்:
அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

விசேடம்:
பாம்பனடிகள் பிரப்பன் வலசைப் பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டை கூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இரு முனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேச நினைவும் நிழலாடக் காணலாம். இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும் அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.

தரவிறக்க பகை கடிதல்