புதன், 11 நவம்பர், 2015

அறுபடைவீடுகளும் கவசங்களும்

முருகனின் புகழ் பாட எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் கந்தர் சஷ்டி கவசங்களுக்கு தனி இடம் உண்டு. இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் எப்பொழுது பிறந்தார்,  பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர் என்ற எந்த விவரமும் எனக்கு தெரியவில்லை, இணையத்திலும் தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. கவசங்களில் வரும் மந்திரங்களை வைத்து பார்க்கும்போது இவர் மந்திரங்கள் கற்றவர் என்பது தெளிவாகிறது. எதாவது ஒரு சித்தரின் வழிகாட்டுதலின் பெயரில் இவர் இப்பாடல்களை இயற்றியிருக்கலாம் என்பது என் கருத்து. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றியிருக்கிறார், எனினும்  திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று தொடங்கும் பாடல்தான் பெரும்பாலும் பாடப்படுகிறது.

இவர் தீராத வயறு வலியால் அவதிபட்டதால், பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகாததால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் திருச்செந்தூர் சென்றார். அந்தநேரம் கந்தர் சஷ்டி திருவிழா நடந்துகொண்டிருக்க, விழாமுடியும் வரை முருகனை தரிசித்துவிட்டு பின் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தார். தமிழிலும் மந்திரத்திலும் புலமை பெற்ற அவர் முருகன் மேல் ஆறு பாடல்களை, ஆறு படைவீடுகளின் மேல் பாடினார். இவர் பாடி முடிக்கவும், விழா முடியவும், இவரது வயிறு வலி பூரணமாக குணமடையவும் சரியாக இருந்தது.

இந்த ஆறு பாடல்களையே நாம் கந்தர் சஷ்டி கவசமாக போற்றுகின்றோம். இனிவரும் நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலாக பார்ப்போம்.

அறுபடைவீடுகள்
1. திருவாவினன்குடி (பழனி)
2. திருவேரகம் (சுவாமிமலை)
3. திருச்செந்தூர்
4. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)
5. திருப்பரங்குன்றம்
6. பழமுதிர்சோலை